சென்னை; ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கு 10வது முறையாக பரோலை தமிழகஅரசு நீட்டித்ததுள்ளது. இதனால்,கடந்த 8 மாதமாக சிறையில் இருந்து விடுபட்டு வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தனர். இதில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் கருணையால், கடந்த ஆண்டு விடுதலையானார். அதுபோல தங்களையும் விடுவிக்க வேண்டும் என குற்றவாளிகளான நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், அவர்கள் திமுக அரசின் தாராளத்தின் மூலம் பரோலில் வெளியே வந்துள்ளனர். வேலூர் பெண்கள் தனி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி கடந்த 8 மாதங்களாக பரோலில் வெளியே வந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
நளினி, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி முதல் பரோலில் வெளியே வந்தார். அன்றுமுதல் அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது மீண்டும் 10வது மாதமாக பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நளினியின் தாய் பத்மா கடந்த 9 மாதங்களை கடந்து உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நளினி தற்போது காட்பாடி அருகே பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்திட்டு வருகிறார். அவர் தங்கி உள்ள வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.