சென்னை: தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கடலோர காவல்படை விளக்கம் அளித்துள்ளது. எச்சரிக்கையை மீறி சந்தேகத்திற்கு இடமாக படகு சென்றதால், அதன்மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவித்து உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் உட்பட 10 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து வந்துள்ளனர். அவர்கள் தெற்கு மன்னர் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், இதில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் எனும் மீனவர் மீது குண்டு பாய்ந்தது. அதன் பிறகு அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு குண்டுகளை அகற்றுவதற்கு மேல் சிகிச்சை செய்வதற்கும் மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது மீனவர் வீரவேல் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்று வந்த மீனவர் வீரவேலை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்த்து நலம் விசாரித்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடலோர பாதுகாப்புப்படை செய்திப்பிரிவின் சார்பில் விளக்கம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், சந்தேகத்திற்குரிய படகு ஒன்று பாக் சலசந்தி பகுதியில் இன்று காலை கண்டறியப்பட்டதாகவும், சர்வதேச எல்லைப் பகுதி என்பதால் அந்த படகுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால், அந்த படகு எச்சரிக்கைக்குப் பிறகும் நிற்காததால் துப்பாக்கியால் சுட்டு படகை நிறுத்தியதாகவும், இதில் படகில் இருந்த ஒருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த நபரை இந்திய கடற்படைக்கு சொந்தமான சேட்டக் ஹலிகாப்டர் மூலமாக ராமநாதபுரம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கடற்படை தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.