டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், மூத்த தலைவரான 80வயது மல்லிகார்ஜூன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை தாண்டி ஒருவர்  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக  தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில்  காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

கார்கேவுக்கு குசோனியா காந்தி, பிரியங்கா காந்தி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். ராகுல்காந்தி, கார்கேவை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதுபோல திமுக சார்பில் டி.ஆர்.பாலு நேரில் சென்று கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை நேரிலும், போனிலும், சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்,  கார்கேவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், காங்கிரஸ் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவரின் எதிர்காலம் இனிமையானதாக அமைய எனது வாழ்த்துக்கள். வரவிருக்கும் காங்கிரஸ் தலைவர் பதவிக்காலம் அவருக்கு சிறப்பான தாக அமையட்டும் என பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில், இந்தியாவின் மதச்சார்பற்ற – அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடிவரும் இந்த முக்கியமான தருணத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகி யுள்ளார். தமது புதிய பொறுப்பில் அவர் வெற்றி காண வாழ்த்துகிறேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும், சசி தரூரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. இதில் மல்லிகார்ஜூன கார்கே மொத்தம் 7,897 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை தாண்டி ஒருவர் காங்கிரஸ் தலைவராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.