சென்னை: சென்னை மாநகரத்தின் விரிவாக்கத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, சென்னை மாநகரத்தின் விரிவாக்கம் 5,904 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. சென்னை பெருநகரை (சிஎம்ஏ) விரிவாக்கம் செய்வதற்கான அரசாணை இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அமைச்சர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய முதல்வர், சென்னை மாநகர விரிவாக்கம் திட்டத்தை விரிவாக ஆய்வு செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளித்தார். இந்த கூட்டத்தில், மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ் மக்வானாவுடன் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் பங்கேற்றனர்.
“முதல்வர் கூறியுள்ளபடி, இறுதி அறிவிப்பை வெளியிடுவதற்கு முன், சட்டத் துறைக்கு முன்மொழிவு அனுப்பப்படும். சட்டத் துறை ஆய்வு செய்து உத்தரவை வெளியிட குறைந்தது ஒரு மாதமாவது ஆகும்” என்று கூறப்படுகிறது. அதன்படி, சென்னை பெருநகரப் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) விரிவாக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கும் வகையில் நகரத்திற்கான விரிவான இயக்கம் திட்டத்தை (சிஎம்பி) புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. விரிவாக்கப்பட்ட சிஎம்ஏ (CMA – Chennai Metropolitan Area) ஆனது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் முழுவதையும் உள்ளடக்கும்.
இப்போது, அண்டை மாவட்டங்களில் சில பகுதிகள் மட்டுமே CMA கீழ் உள்ளன.இந்த விரிவாக்கத்தின்படி மேல் பல பகுதிகள் சென்னையுடன் இணையும். அதாவது, தற்போது, சிஎம்ஏவின் பரப்பளவு 1,189 சதுர கிலோமீட்டராக உள்ளது, இது, 8,878 சதுர கிலோமீட்டர் அளவுக்கு விரிவாக்கப்பட உள்ளது.
இதற்காக மாஸ்டர் பிளான்கள் மற்றும் இயக்கத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளும் உள்ளடங்கி உள்ளது. இதுதொடர்பாக பல கட்ட விசாரணை மற்றும் ஆலோசனை நடைபெற்றது. அப்போது அந்த பகுதிகள் சென்னையுடன் இணைக்கப்படுவதால், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிறந்த திட்டமிடலுக்கு வழி வகுக்கும் என்றும், இதன் மூலம் இயற்கை வளங்களை அதிக சுரண்டலில் இருந்து காப்பாற்ற முடியும் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதன்பின்னர் சில திருத்தங்களுடன் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து, தற்போதைய CMA (1,189 சதுர கிமீ) மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான பிராந்திய திட்டங்களுக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான செயல்முறையை CMDA ஏற்கனவே தொடங்கியுள்ளது.