சென்னை: நெடுஞ்சாலைத்துறை சார்பில் தருமபுரி, விழுப்புரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.58.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனப்டி, இரண்டு இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் ஒரு ஆற்றுப்பாலம் ஆகிய மூன்று பாலங்களை திறந்து வைத்தார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா, போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம், சிவாடி மற்றும் தருமபுரி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவு எண் 38-க்கு மாற்றாக பழைய தேசிய நெடுஞ்சாலை – 7ல், அதியமான் கோட்டையில் 623.3 மீட்டர் நீளத்திற்கு, 12 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்; சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் மேச்சேரி இரயில் நிலையங்களுக்கு இடையே இரயில்வே கடவு எண் 15-க்கு மாற்றாக தொளசம்பட்டி சாலையில், 688.8 மீட்டர் நீளத்திற்கு 18 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலம்;
பருவ மழை காலங்களில் பெண்ணையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டும், பரசுரெட்டிபாளையம், மடுகரை, பூவரசங்குப்பம், பட்டாம்பாக்கம், சொர்ணாவூர், மாளிகைமேடு, கோழிப்பாக்கம், புலவனூர் மற்றும் கொங்கராயனூர் கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும் விழுப்புரம் மாவட்டம், மேட்டுப்பாளையத்தையும் கடலூர் மாவட்டம், மேல்குமாரமங்கலத்தையும் இணைக்கும் வகையில் பெண்ணையாற்றின் குறுக்கே, 480 மீட்டர் நீளத்திற்கு 27 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம்; என மொத்தம் 58 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மூன்று பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.