சென்னை: சர்ச்சை எதிரொலி காரணமாக, ஒரே அறையில் கட்டப்பட்டிருந்த இரு கழிப்பறைகள்  தனித்தனி கழிப்பறையாக மாற்றப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வரைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 9ந்தேதி திறந்து வைத்த பூந்தமல்லி  ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம்  சிப்காட் திட்ட அலுவலகத்தில் உள்ள ஒரு கழிப்பறையில், இரு கோப்பைகள் அமைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலானது.  ஒப்பந்ததாரர்களின் அலட்சியம் மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தனமே  இதற்குக் காரணம் என்ற ரீதியிலும் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், தவறான தகவல் என அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

பாதி கட்டி முடிக்கப்பட்டுள்ள படத்தை இணையத்தில் தவறாகப் பகிர்ந்து வருவதாக விளக்கம் தெரிவித்துள்ள அதிகாரிகள் அதற்கான பிளான் அமைப்பையும் வழங்கி உள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, “அலுவலக கட்டுமான பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. ஒரு புறம் ஆண்கள் கழிவறையாகவும் மற்றொரு புறம் பெண்கள் கழிவறையாகவும் இருக்கும். அந்த இரு கழிவறைக்கு இடையே தடுப்புச் சுவர் (செப்பரேட்டர்) ஏற்படுத்தப்படும். அப்போது தான் இரண்டு கழிப்பறை அது இரண்டு கழிவறைகளாக முழுமை பெறும். ஆனால் அதற்குள் இது தொடர்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக குற்றம் சாட்டியதுடன், அதற்கான புளு பிரிண்ட் என ஒரு வரைப்படத்தையும் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த வரைப்படத்தில் குறிப்பிட்டுள்ளபடி கழிவறை அமைக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அந்த வரைபடத்தில் 1.9×4.3 என்ற அளவு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதாவது ஒரு கழிவறையின் அகலம் 1.9அடி என்றும், நீளம் 4.3 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் கழிவறையின் நேர் எதிரே இரு வாஷ் பேஷின்கள் இருப்பது போன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, கழிவறையின் கதவும், வாஷ் பேஷினுக்கும், டாய்லட் கோப்பைக்கும் (கிளாசெட்) இடையே நடுவில் இருப்பது போல்  வடிவமைக்கப்பட்டு உள்ளது. திட்ட அதிகாரி கவிதா கூறியதுபோல, ஆண், பெண் என தனித்தனி கழிவறை அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தால், அதில் இரு கழிவறைக்கும் ஒரே கதவு போடுவதற்கு சாத்தியம் இல்லை.

ஆனால், வரைப்படத்தில் உள்ளதுபோல் அமைக்காமல் கழிவறை வேறு வடிவத்தில் அமைக்கப்பட்டு உள்ளதுடன், தற்போது இரு கிளாசெட்களுக்கும் (வெஸ்டர்ன் டாய்லட்) இடையில் தடுப்பு அமைக்கப்பட்டு, கதவுகள் போடப்பட்டு உள்ளன. ஒரு கழிவறையின் அகலம் 1.9 அடி அதாவது 2 டி மட்டுமே உள்ளது. இதுபோன்ற அமைப்பு சிறுநீர் கழிக்க மட்டுமே அமைக்கப்படும் நிலையில், தற்போது கழிவறைக்காக மாற்றப்பட்டுள்ளது. இருந்தாலும் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டு இருப்பதால், ஒருவர் அதில் வசதியாக அமர்ந்து தனது கடனை கழிப்பது சற்று சிரமம்தான். அதுவும் சற்று தடிமான இருப்பவர்கள் இந்த டாய்லட்டை உபயோகப்படுத்த முடியுமா?  என்பது, விளக்கம் அளித்த அதிகாரிக்குத்தான் வெளிச்சம். 

இருந்தாலும், இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகள் காட்டிய விறுவிறுப்பும், சுறுசுறுப்பும் மற்ற பணிகளிலும் நடைபெற்றால் பொதுமக்கள் வரவேற்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.