சென்னை: உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் இன்று (அக்.10) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த முலாயம், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். முலாயம் சிங் யாதவ் இறந்த செய்தியை, அவரது மகனும் சமாஜவாதி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முலாயம்சிங் மறைவையொட்டி, உ.பி.யில் 3நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் முலாயம்சிங் யாதவ் மறைவுக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முலாயம் சிங் யாதவ் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவசரநிலை காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தார் என்றும், சாதாரண சூழலில் இருந்து வந்த முலாயம் சிங் யாதவின் சாதனைகள் அசாதாரணமானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முலாயம் சிங் யாதவுடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளதுடன், இருவரும் முதல்வராக மாநிலங்களுக்கு சேவை செய்தபோது பலமுறை சந்தித்துப் பேசியுள்ளோம். அவருடன் நெருங்கிய தொடர்பு நீடித்தது. அவரின் பார்வைகளை அறிந்துகொள்ள எப்போதுமே ஆவல் இருக்கும். அவரின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்துக்கும், ஆதரவாளர் களுக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முலாயம்சிங் யாதவ் உடலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். குருகிராம் மேதாந்தா மருத்துவமனைக்கு நேரில் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முலாயம் சிங் யாதவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு காங்கிரஸ் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவு இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளது.
முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அவரின் மகன் அகிலேஷ் யாதவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உ.பி.யின் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான மறைவு வருத்தம் அளிக்கிறது. ஓபிசிக்கான இடஒதுக்கீட்டிற்காக நின்ற இந்திய அரசியலில் மிக உயர்ந்த நபர்களில் ஒருவரான திரு முலாயம் சிங் மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளதுடன், என் சகோதரருக்கு (அகிலேஷ் யாதவ்) எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
முலாயம் சிங் யாதவ் உடலுக்கு திமுக சார்பில் கட்சியின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவருமான திரு டி.ஆர். பாலு திருவுக்கு இறுதி மரியாதை செலுத்துவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முலாயம்சிங் உடல் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், டெல்லி முதல்வர் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.