கொரிய தீபகர்ப்பத்தில் கடந்த சில நாட்களாக தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் கூட்டாக ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதே வேளையில் கடந்த பத்து நாட்களில் இதுவரை நான்கு முறை கொரிய கடலில் ஏவுகணை சோதனை நடத்தியது.
இந்த நிலையில், ஐந்தாவது முறையாக இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கடந்த முறையை விட அதிக தூரம் செல்ல கூடிய ஏவுகணையை ஏவியதாக கூறப்படுகிறது.
இதனால் ஜப்பான் நாட்டின் வட கிழக்கு பகுதியில் உள்ள மக்களை எச்சரித்த அந்நாட்டு அரசு அவர்களை ரயில்கள் மற்றும் உயரமான கட்டிடங்களில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தியது.
வடகொரியா ஏவிய இந்த நாடு விட்டு நாடு பாயும் இடைப்பட்ட தூரம் செல்லும் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியைத் தாண்டி பசிபிக் கடலில் விழுந்தது.
4600 கி.மீ. தூரம் தாண்டி பசிபிக் கடலில் சென்று இந்த ஏவுகணை விழுந்ததை அடுத்து ஜப்பான் மக்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கையை வாபஸ் வாங்கியதோடு மட்டுமல்லாமல் அதுவரை நிறுத்தி வைத்திருந்த ரயில் போக்குவரத்தையும் துவங்கியது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவியிருக்கும் இந்த ஏவுகணையால் பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.