டெல்லி: நாடு முழுவதும் அக்டோபர் 1ந்தேதி 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி டெல்லி பிரகதி மைதானத்தில்  நடைபெறு கிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக இந்தியா மொபைல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள தகவலில்,  மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் “இந்திய மொபைல் காங்கிரஸ் 2022” தொடக்க விழாவை அறிவிப்பதில் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியுடன் ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிகழ்வைக் காண அக்டோபர் 1ந்தேதி எங்களுடன் பிரகதி மைதானத்தில் இணையுங்கள் என்று தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1ஆம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 5 ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தேசிய அகன்ற அலைவரிசை திட்டத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரதமர் மோடி, இந்தியாவில் 5G சேவைகளை தொடங்கி வைக்கிறார். ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்தியா மொபைல் காங்கிரஸில் சேவை தொடங்கி வைக்கப்படுகிறது” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக ஏலம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் 1ந்தேதி இந்தியா மொபைல் காங்கிரஸ் (India Mobile Congress) தொடக்க விழாவில் இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்று கூறப்பட்டது.  5ஜி இணையசேவை  தல் கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்படுகிறது.  தொடர்ந்து 5ஜி சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும். 4ஜியை விட 10 மடங்கு வேகமாக இருக்கும் என்று பிரதமர்மோடி அண்மையில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, 5ஜி சேவை தொடக்க விழா 1ந்தேதி நடைபெற உள்ளது. இந்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) கூட்டாக இணைந்து ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடக மற்றும் தொழில்நுட்ப மன்றமாக கருதப்படும் இந்திய மொபைல் காங்கிரஸை (IMC) ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “குறுகிய காலத்தில் நாட்டில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை 80 சதவீத விரிவுப்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என கூறினார். டெல்லியில் ஒரு தொழில்துறை நிகழ்வில் உரையாற்றிய அஸ்வினி வைஷ்ணவ், “5G சேவையின் பயணம் மிகவும் உற்சாகமாக இருக்கும். மேலும் பல நாடுகள் 40 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை விரிவுப்படுத்த பல வருடங்கள் எடுத்துக் கொண்டன. ஆனால், நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். குறுகிய காலத்தில் 80 சதவீதம் விரிவுப்படுத்த இலக்கை வழங்கியுள்ளது அரசு. மற்றும் மிகக் குறுகிய காலக்கட்டத்தில் கண்டிப்பாக குறைந்தபட்சம் 80 சதவீதத்தையாவது ஈடுகட்ட வேண்டும்” என்றார்.

5ஜி தொழில்நுட்பம், இந்தியாவுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 2023 மற்றும் 2040க்கு இடையில் இந்தியப் பொருளாதாரத்திற்கு  36.4 டிரில்லியன் டாலர்கள் ($455 பில்லியன்) பயன் அளிக்கும் என மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய தொழில்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள மொத்த இணைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 5G சேவையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2G மற்றும் 3G இன் பங்கு 10 சதவீதத்திற்கும் குறைவாகக் குறையும் என்றும் மொபைல் தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று 5ஜி ஏலம் எடுத்திருந்தன. தொலைத்தொடர்பு துறையின் பரிணாம வளர்ச்சி அடிப்படையில் அறிமுகம் ஆகவுள்ள இந்த 5ஜி சேவைகள் என்பது மிக அதிவேகமான இண்டர்நெட் வசதி மற்றும் துல்லியமான வாய்ஸ் காலிங் உள்ளிட்ட சேவைகளை வழங்க உள்ளது என்று கூறுகிறார்கள்.