சென்னை:  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக 28ந்தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh – ஆர்எஸ்எஸ்) 1925 செப்டம்பர் மாதம்  விஜயதசமி அன்று நிறுவப்பட்டது. இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி  அமைப்பு. ஆர்எஸ்எஸ் என்றும்,  தேசிய தொண்டர் அணி என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த அமைப்பின் சார்பில், தமிழ்நாட்டில், ஆர்எஸ்எஸ் தோற்றுவிக்கப்பட்ட நாளான விஜயதசமி,  இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு ஆகியவற்றை  முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும், 51 இடங்களில்  அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஊர்வலத்துக்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த ஆகஸ்டு  மாதம் மனு அளித்தது. இந்த மனுமீது காவல்துறை எந்தவொரு முடிவும் எடுக்காததால், ஆர்எஸ்எஸ் இயக்கம் சார்பில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை செய்யப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ஆர்எஸ்எஸ் ஊர்வலம்,  எந்த பாதையில் செல்கிறது என்ற தகவல்களை அளிக்கவில்லை என்று தெரிவித்தது. மேலும், ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது என்றும், காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், இதற்கு மனுதாரர்கள் உறுதிமொழி தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நாட்டில்  பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியதுடன்,  உச்ச நீதிமன்றமும் பலமுறை இதை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊர்வலத்தை காவல்துறை ஒழுங்குபடுத்தலாம் என்றும், ஆனால் அனுமதி மறுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிறன்று ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல என்றும், சட்டத்தை மதிக்கக்கூடியவர்கள் என்பதால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் குறிப்பிட்ட ஒரு இடம் என்று குறிப்பிடாமல், மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதால், காவல்துறை தரப்பில் முடிவெடுக்க தாமதம் ஆவதாக தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன், அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.