டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, நீரா ராடியாவின் டெலிபோன் ஒலிப்பதிவுகள் குறித்து விசாரிக்கப்பட உள்ளதாக  சிபிஐ  தெரிவித்துள்ளது.  8,000 ஒற்றைப்படை ஒலிப்பதிவு உரையாடல்களின் உள்ளடக்கங்களை விசாரிக்கபட இருப்பதாகவும் முதற்கட்டமாக 14 ஒலிப்பதிவுகளை விசாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும் கூறியுள்ளது.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2ஜி ஊழல் வழக்கு பெரிதாகப் பேசப்பட்டபோது. இந்த வழக்கில், தமிழ்நாட்டைச்சேர்ந்த அப்போதைய அமைச்சர் ராஜா, அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக திமுக எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டு, சுமார் ஒராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், இறுதி விசாரணையில், குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அனைவரையும் சிபிஐ நீதிபதி ஓபி சைனி விடுவித்தார். இது சர்ச்சையானது. பின்னர் 2 ஜி வழக்கு பாஜக அரசால்  மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில்,  கார்ப்பரேட் லாபியான நீரா ராடியா பெயர் அடிபட்டது. இவர்தான் தொழிலதிபர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தரகராக செய்லபட்டது தெரிய வந்தது.  இதையடுத்து, 2008ம் ஆண்டிலும், 2009ம் ஆண்டிலும் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டும் அவரின் தொலைப்பேசி அழைப்புகளை கண்காணித்து பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.  இதில் முக்கிய நபராக கருதப்பட்ட, நீரா ராடியாவுடன் முக்கிய பிரமுகர்கள் பேசிய தொலைபேசி, செல்போன் ரகசிய ஒலிப்பதிவுகள் கையக்கப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அப்போது டாடாவுடன் அவர் பேசிய உரையாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை கண்டித்து டாடா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட  வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய  அரசியல் சாசன அமர்வு, கடந்த 2017ம்ஆண்டு தனிநபரின் அந்தரங்க உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், அரசியலமைப்பு அந்த உரிமையை வழங்கியுள்ளது எனத் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், நீரா ராடியாவின் தொலைபேசி ஒலிப்பதிவுகளை  முழுமையாக வெளியிடக் கோரி “மக்கள் வழக்காடு மன்றம்’ என்ற அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷண் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த =  சிறப்பு அமர்வு   நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் “டேப்’ விவகாரம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்னை  என தெரிவித்திருந்தது. இந்த வழக்கு கடந்த, செப்டம்பர் 1ந்தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், 2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான  நீரா ராடியாவின் போன் உரையாடல்களை விசாரிப்பதாக சிபிஐ தெரிவித்து உள்ளது. சுமார்  8,000 ஒற்றைப்படை ஒலிப்பதிவு உரையாடல்களின் உள்ளடக்கங்களை விசாரிக்க உள்ளதாகவும் முதற்கட்டமாக   14 ஒலிப்பதிவுகள் தொடர்பான விசாரணைகள்  தொடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.