மதுரை: முகூர்த்த நாட்களையொட்டி கிலோ மதுரை மல்லி ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை வெகுவாக குறைந்துள்ளது. இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கிலோ ரூ. 300க்கு மல்லிகைப் பூ விற்பனையாகி வருகிறது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக மலர் சாகுபடி மற்றும் மலர் விற்பனைகளும் வெகுவாக குறைந்து, விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா குறைந்து மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் கடந்த 6 மாதமாக மீண்டும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.
தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பெண்களிடையே மதுரை மல்லிமீது தனி மோகம் உண்டு. குண்டு குண்டாக, மனதை மயக்கும் வகையில், நறுமனமும், வெண்மையும் கொண்ட மதுரை மல்லிகைப் பூக்கள் காண்பவர் மனதை ஈர்க்கு ம். இந்த பூக்களுக்கு ஆண்டு முழுவதுமே மக்களிடம் வரவேற்பு உண்டு. வீடுகளில் நடக்கும் விழாக்கள் முதல் கோயில்கள், பொது நிகழ்ச்சிகளில் மல்லிகைப் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக திருமண விழாக்களில் மல்லிக்கு தனி மரியாதேயே உண்டு.
இப்பேர்பட்ட மல்லிக்கைப்பூ விற்பனை மெயின் சந்தையாக திகர்வது மதுரை மாட்டுத்தவாணி மலர் சந்தை. சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டும் மலர்கள் அனைத்தும் மாட்டுத்தாவணி சந்தைக்கு வந்துதான் போகும். இங்கிருந்துதான் பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோல, சிங்கப்பூர், மலேசியா, கனடா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு மதுரை மல்லிகைப் பூ ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த மல்லிகைப்பூ கடந்த சில வாரங்களாக கடுமையாக உயர்ந்து விற்பனையாகி வந்தது. இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு 1600 முதல் 1800 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது. தொடர்ந்து, முகூர்த்த நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களில்கூட கிலோ ரூ.1000 முதல்ரூ.2,000 வரை விலை விற்பனையாகி வந்தது.
இதனால், சாதாரண மக்கள் மல்லிகைப் பூ வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இந்த நிலையில், தற்போது மல்லிகைப்பூ கிலோ ரூ.300க்கு குறைந்துள்ளது. இது சாதாரண மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இருந்தாலும், அடுத்தடுத்து வரும் முகூர்த்த நாட்களில், விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.