ஈரோடு: திமுக அரசில் லஞ்சம் இல்லாத துறையை காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு என முன்னாள்  அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் அமைச்சரும், திமுகவின் துணைப்பொதுச்செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதுமுதல் பல்வேறு செயல்பாடுகள் மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மணல் குவாரி முதல் அனைத்து நடவடிக்கைகளிலும் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருட்கள் நடமாட்டம் தீவிரமாகி உள்ளதுடன், கொலை, கொள்ளை குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. திமுக அரசின் செயல்பாடுகளை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  ஆனால், அதிகாரித்தை கையில் வைத்துள்ளதால், திமுக தனது எடுபிடிகளின் மூலம் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு  பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், திமுக கட்சியை சேர்ந்தவர்களும், கூட்டணி கட்சியினரும் திமுக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு போன்றவற்றுக்கு கூட்டணி கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  திமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவன் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மூத்த திமுக நிர்வாகியான ஜெகதீசன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தீவிர ஆதரவாளர்.

சமீபத்தில், மறைந்த ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தை விட, மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்ற அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விழாவை கடுமையாக சாடியிருந்தார். மற்றொருவரின் கட்டுரையை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில்,  ஜெயலலிதா வீட்டு திருமணத்தைப் போல மதுரையில் நடந்த அமைச்சர் மூர்த்தி வீட்டுத் திருமணம்! பல்லாயிரம் ஆடுகளை வெட்டி, கோழிகளை அடித்து போட்டு பணம் எண்ணும்  மெஷின்களை வரிசையாக வைத்து மொய் வசூல் செய்து நடத்துகிற திருமணம் எல்லாம் திராவிட மாடலா..?

இந்தத் திருமணத்தில்  முதல்வர்  கலந்து கொண்டு இது ‘பிரம்மாண்டம்’ என்று புகழ்வதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 மற்றொரு பதிவில்,

 1993 திமுக விலிருந்து கலைஞரையே வெளியேற்றி விட்டு திமுகவை கைப்பற்றும், உருவாக்கும் முயற்சியில் பணக்காரப் பயல்களோடு சேர்ந்து கொண்டு கோபாலசாமி கொக்கரித்த காலத்தில் கலைஞர் பட்ட பாட்டை , மன உளைச்சலை , உற்ற வேதனையை அருகிருந்து கண்டவர் நாங்கள் !

அந்த நிகழ்வுகள் 30 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம் எங்களுக்கு !

பேசிய பேச்சுக்கள் , ஏசிய வசவுகள் , சீண்டிய கிண்டல்கள் , செய்த அவமதிப்புக்கள் , ஏகடியங்கள் கணக்கில் அடங்காதவை !

ஆட்சியில் அமர்ந்துள்ளோருக்கு அது மறந்திருக்கலாம் . அவர் தம் அணுகுமுறை வேறு .

நாங்கள் ஏற்பதற்கில்லை சுய மரியாதை எமக்கு கொஞ்சம் உண்டு என விமர்சித்துள்ளார்.

மற்றொரு பதிவில்,

லஞ்சம் இல்லாத தமிழக அரசின் ஒரு துறையை சொன்னா ஒரு கோடி பரிசு என பதிவிட்டுள்ளார்.

இது போன்ற பதிவுகளால் சுப்புலட்சுமி ஜெகதீசன்மீத திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதுகுறித்து சுப்புலட்சுமி எந்தவொரு கருத்தும் கூறாத நிலையில், சமூக வலைதளங்களில் திமுகவினர் சுப்புலட்சுமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசியலில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே போற்றும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக ஆட்சி மனநிறைவைத் தருகிறது. இந்த மனநிறைவோடு அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சராக சுப்புலட்சுமி ஜெகதீசன், கடந்த 1977 ஆம் ஆண்டு   அதிமுகவில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர்,  சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் திமுகவில் சேர்ந்த அவர், 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அப்போது மாநில சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். தற்போது திமுகவின் முக்கிய பதவியான துணை பொதுச்செயலாளராக சுப்புலட்சுமி உள்ளார். சமீப காலமாக அவர் கட்சியினரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.