சென்னை: தமிழ்நாட்டில், கொலை, தற்கொலை, முதியோர் கொலை போன்றவை அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் கொலைகள் குறைந்துள்ளது என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது. குற்றத்தைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சென்னையை பொறுத்தவரை, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20% சதவீதம் மரணங்கள் குறைந்துள்ளது என்றார்.
மேலும், போதைப்பொருட்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியவர், மாவா, குட்கா விற்பனை செய்வதைத் தடுத்து அதனை பறிமுதல் செய்துள்ளோம் என்றவர், போதை பொருட்கள், பஸ் டே உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றவர், அதையும் மீறி மாணவர்கள் ஆயுதங்களை எடுத்தால் கைது செய்து சிறையில் அடைப்போம் என்றார்.
சென்னையில் விபத்துகளைக் குறைக்க விபத்து குறித்து போக்குவரத்து போலீசார், சென்னை மாநகராட்சி, சென்னனை ஐஐடி இணைந்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது. அதன்பின் அந்தப் பகுதியில் விபத்துகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.