காலகாலேசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், காலகாலேசுவரர் என அழைக்கப்படுகிறார். கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில் பாளையம் என்ற சிற்றூர்.

ஆளுயர குரு பகவான் சிலையைக் கண்டதும் நம் மனதில் சொல்ல இயலாத அமைதியை ஏற்படுத்தும். ஒவ்வொரு குரு பெயர்ச்சியும் இங்கு மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இக்கோவிலின் அம்மன் கருணாகரவல்லி (பார்வதி) கொடிமரத்திற்கு அடுத்து வரும் நுழைவாயிலுக்குள் சென்றதும் இடப்புறம் சந்திரனுக்கும் வலப்புறம் சூரியனுக்கும் சிறியதாய் தனிச் சன்னதிகள் உள்ளன. அடுத்து பலிபீடமும் நந்திதேவரும் உள்ளன.

சுவாமி சன்னதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கருணாகரவல்லி அம்மன் சன்னதியின் முன்பகுதியில் இடப்புறம் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாளும் வலப்புறம் துர்க்கையும் உள்ளனர்.

சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னதியில் காட்சி தருகிறார்.

சுவாமி சன்னதியின் வெளிச்சுற்றுச் சுவரின் பின்புறத்தில் சண்டிகேசுவரருக்கு எதிரில் பிரம்மாவும் உள்ளார். இத்திருக்கோயில் உள்ளே கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவன் கோவிலில் விஷ்ணு, பிரம்மா இருவரும் வழிபடப்படுவது இக்கோவிலின் சிறப்பு.

கோவில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் திருவுருவங்களும் தனியிடத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.