சென்னை; பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், உடற்கல்வி குழுவுக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமை தாங்கி மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவரான் பி.ஆர்.சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமைநீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் நடைபெற்ற விசாரணையின்போது, மனு தொடர்பாக பள்ளி கல்வித் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சென்னையில் உள்ள 1.434 பள்ளிகளில், 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்றும், அந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், அருகில் உள்ள பொது விளையாட்டு மைதானங்களை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி கட்டாயமாக்கப்பட்டு, வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரிய விதிகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், இவை காகித அளவிலேயே இருக்க அனுமதிக்காமல் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பிற பாடங்களைப் போல உடற்கல்விக்கும் சம முக்கியத்துவம் வழங்குவதை உறுதி செய்ய அவ்வப்போதைக்கு ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதையும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதையும் உறுதி செய்யவும், கண்காணிக்கவும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை இன்னும் ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
உடற்கல்வி வழங்கத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை அடையாளம் கண்டு அந்த பள்ளிகளில் உடற்கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என, குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.