சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு, 150 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், 150 சிறப்பு பேருந்துகளை திருப்பதி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த பிரமோற்சவத்தில் கலந்துகொண்டு ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் குவிவார்கள். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27ந்தேதி தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி முடிகிறது. பிரம்மோற்சவம் தொடங்கப்படும் நாளான செப்டம்பர் மாதம் 27-ம் தேதி மாலை சுவாமிக்கு ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார். பிரமோற்வத்தின் இறுதி நாட்களான அக்டோபர் மாதம் 1ம் தேதி இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையாகும். மேலும், அக்டோபர் 2-ம் தேதி தங்க ரதத்தில் சுவாமி பவனி வர உள்ளார். 3ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 4-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, பிரம்மோற்சவ திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வும் செப்டம்ப்ர 27 ஆம் தேதி மாலையே நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா விழாவில் பக்தர்கள் கலந்துகொள்ளும் வகையில், தமிழகஅரசு 150 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.
சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக திருமலைக்கு 30 பேருந்துகள்; காளஹஸ்தி வழியாக 55 பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது. திருவண்ணாமலை யில் இருந்து வேலூர் வழியாக 20 பேருந்துகள்; வேலூர் சித்தூர் வழியாக திருப்பதிக்கு 65 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், குமரி – திருச்சி, சேலம், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வேலூர் வழியாக சிறப்பு பேருந்துகளை திருப்பதிக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, குப்பம் வழியாக 15 பஸ்கள்; கள்ளக்குறிச்சியில் இருந்து 8 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.