சென்னை: நடிகை திரிஷா அரசியலில் நுழையப்போகிறார் என செய்திகள் வெளியான நிலையில், “நான் அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவலில் துளியும் உண்மையில்லை” என திரிஷா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழ், தெலுங்கு, திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. இவர் சினிமாவை தாண்டி விலங்குகள் நல ஆர்வலராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், திரிஷா விரைவில் அரசியலில் நுழைய உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வந்தன. மேலும், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரவேற்பு தெரிவித்ததுடன், நடிகை திரிஷாவுக்கு காங்கிரஸ் சார்பில் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை என உறுதிபட தெரிவித்தார்.
இந்த நிலையில், தான் அரசியல் பிரவேசம் செய்து தொடர்பான செய்திக்கு நடிகை திரிஷாவே விளக்கம் அளித்துள்ளார். தான் அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவல் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை. அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்று கூறி தன்னைப்பற்றிய அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா.
அதுபோல திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் அளித்த விளக்கத்தில் ”திரிஷா அரசியலுக்கு நிச்சயமாக வரவில்லை. அவர் காங்கிரசில் இணையப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. திரிஷா சினிமாவில் பிசியாக இருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்” என்றார்.