வேலூர்: வேலூர் மற்றும் பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்ட பிரபல கே.எச். தோல்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று 2வது நாளாக சோதனையை தொடர்ந்து வருகின்றனர்.
தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமான கே.எச்.குரூப் தலைமை அலுவலகம் சென்னையில் உள்ளது. இதன் கிளை நிறுவனங்கள் வேலூர், பாண்டிசேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளது. இந்த கே.எச் குரூப் தோல்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுக்கு 20 மில்லியன் சதுர அடி தோல் பதனிடுதல், 3 மில்லியன் ஜோடி காலணிகள், 9 லட்சம் தோல் பைகள், 3 மில்லியன் சிறிய தோல் பொருட்கள், 2 மில்லியன் கையுறை ஆகியவற்றை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிறுவனம் மற்றும் அவரது உறவினரின் நிறுவனமான பரிதா தோல்பொருள் தொழிற்சாலை மற்றும் அதன் உரிமையாளர்கள், உறவினர்களின் வீடுகள், மற்றும் அதன் தொடர்புடைய சென்னை, வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட 60 இடங்களில் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நிறுவனங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து நிறைய இடங்களில் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் வாங்கி இருப்பதும் பல தனியார் நிறுவனங்களை தன்னுடன் இணைத்து தோல் பொருட்கள் தயாரித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் வருமானத்தை குறைத்துக் காட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.