குடியாத்தம்: குடியாத்தம் மத்திய கூட்டுறவு வங்கியில்  மானேஜராக பணியாற்றி வரும்  உமா மகேஸ்வரி ரூ.97 லட்சம் பணம் மோசடி செய்து உறுதியான நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

வேலூரை அடுத்த குடியாத்தம் பகுதியில்  மத்திய கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பணம் போடுவது, எடுப்பது மற்றும் பயிர்க்கடன், விவசாயக்கடன் மற்றும் மகளில் சுயஉதவிக்குழு கடன், புதிய தொழில் கடன் என பல உதவிகளுக்காக நாடுவது வழக்கம். இந்த நிலையில், வங்கி மேலாளர் உமா மகேஸ்வரி மீது பல்வேறு புகார்களை பொதுமக்கள் தெரிவித்துவந்தனர்.

அதைத்தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம்  வேலூர் கூட்டுறவு துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் பேரில் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து உமா மகேஸ்வரியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கிடையில் உமா மகேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், உமா மகேஸ்வரிமீதான குற்றச்சாட்டு தணிக்கையின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், உமா மகேஸ்வரியை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. . மேலும் வங்கி தொடர்பாக பொதுமக்கள் உமா மகேஸ்வரியுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.