சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில், மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற தமிழக அரசு முயற்சித்து வருவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்துள்ளார்.

புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது, நாம் தயாரிக்கும் பொருட்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் இந்த புவிசார் குறியீட்டை பெறுகிறோம். புவிசார் குறியீடு தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது என்றாலும், நாம் குறைவான அளவிலேயே விண்ணப்பித்து இருக்கிறோம்.

இதுவரை தமிழகத்தின் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. அதில் தஞ்சாவூர் நாதஸ்வரம், நாச்சியார்கோவில் விளக்கு, ஓவியம், தலையாட்டிப் பொம்மை உள்பட 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தது.   இன்னும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளோம். நம்முடைய பண்பாடு, கலாசாரத்தை மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

தமிழகத்தின்  மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு சென்று, முயற்சி செய்வோம்.

இவ்வாறு கூறினார்.