சென்னை: ஆவின் தயாரிப்புகளாக கோல்டு காஃபி உற்பட 10 புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகப்படுத்தி வைத்தார். கோல்டு காஃபியின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், ஆவின் பொருட்கள் ரேசன் கடையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜனவரி மாதம் பால் புரத நூடுல்ஸ் உள்பட ஆவின் புதிய 5 தயாரிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, மில்க் கேக், யோகர்ட், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர் ஆகிய ஐந்து புதிய ஆவின் தயாரிப்புகள் அறிமுகம் ஆனது. அதைத்தொடர்ந்து கோல்டு காபி உள்பட மேலும் 10 புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், பால்வளத் துறை அமைச்சர் நாசர் அவர்கள் ஆவினில் 10 புதிய பால் பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, கோல்டு காஃபி (Cold Coffee), வெள்ளை சாக்லேட், பலாப்பழ ஐஸ்கிரீம், வெண்ணெய் கட்டி, பாசுந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு போன்ற பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், 200 மி.லி. அளவு கொண்ட கோல்டு காஃபி (Cold Coffee) ரூ.35, 125 மி.லி. பலாப்பழ ஐஸ்கிரீம் ரூ.45, 100 மி.லி. பாஸந்தி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நாசர், ஆவின் குடிநீர் பாட்டில் குறித்து அறிவிப்பு முக ஸ்டாலின் அவர்கள் வெளியிடுவார் என்றும், மற்ற நிறுவனங்கள் பால்விலையை உயர்த்தியதால் ஆவினில் ஐம்பதாயிரம் மீட்டர் பால் விற்பனை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.