சென்னை: இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும் என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு தருகிறது என்று கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10மணிக்கு கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக பிரதமர் பங்கேற்றுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்தியஅமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளனர். விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவற்றை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
முன்னதாக விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வரவேற்று பேசினார். அப்போது, நான் முதல்வன் திட்டம் மூலமாக பல்வேறு சாதனைகளை முதலமைச்சர் செய்திருக்கிறார் என்று பேசினார். அதையடுத்து சிறப்புரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின், நாட்டைச் செழிக்கச் செய்யக்கூடிய வல்லுனர்கள் மாணவர்கள் தான் என்று புகழாரம் சூட்டியவர். அனைவருக்கும் கல்வி என்பதே, திராவிட மாடல் அரசின் கொள்கை ஆகும். மேலும் தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள் என தெரிவித்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர், பட்டம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அனைத்து இளைஞர்களின் கனவுகள் நனவாக வேண்டும் என வாழ்த்துகிறேன். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் இந்நாள் மிக முக்கியமான நாள்.
நாட்டை கட்டி அமைக்கக்கூடிய ஆசிரியரான நீங்கள் நாளைய தலைவர்களை உருவாக்குகிறீர்கள். பெற்றோர்களின் தியாகங்கள் அவர்களது பிள்ளைகளின் சாதனைகளுக்கு மிக முக்கியமானதாகும். இளைஞர்களின் சாதனையை கொண்டாடுவதற்காக துடிப்புமிக்க நகரமான சென்னையில் நாம் கூடியிருக்கிறோம். இளைஞர்களில் இருந்து உருவாகும் எனது ஊழியர்கள் சிங்கம்போல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பார்கள் என விவேகானந்தர் கூறினார். இளைஞர்களே எனது நம்பிக்கை என சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருந்தும்.
இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது. உலகத்தின் வளர்ச்சி இயந்திரம் இந்தியா. இளைஞர்கள்தான் நாட்டு வளர்ச்சியின் இயந்திரம் என புகழாரம் சூட்டினார். உலகத்தின் வளர்ச்சி இன்ஜின் இந்தியா ஆகும் என்றவர், இளைஞர்கள் மீதான நம்பிக்கை பற்றி பேசும்போது அப்துல்கலாமை நினைவு கூறாமல் இருக்க முடியாது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அப்துல் கலாமின் சிந்தனைகள் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டுபவை. முக்கிய தருணத்தில் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். மாணவர்களின் கனவை நிறைவேற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது நன்றிகள்.
உலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நேரம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் சிறந்த வாய்ப்புக்கான நேரம் என்று நான் கூறுவேன். முன் எப்போதும் இல்லாத வகையில், கொரோனா தொற்று நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் சோதனையாக அமைந்தது. அனைத்து நாடுகளையும் அலைக்கழித்து விட்டுச் சென்றது. சோதனையான காலகட்டத்தில்தான் எத்தகைய உறுதியுடன் நாம் உருவாக்கப்பட்டு இருக்கிறோம் என்று தெரியும். மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள், சாமானிய மக்கள் உள்பட அனைவரின் முயற்சியால் நாம் கொரோனாவில் இருந்து மீண்டோம். இதுவரை முன் எப்போதும் அறியப்படாத கொரோனா தொற்றை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது இந்தியா.
தொழில்நுட்பம் காரணமான இடையூறுகளின் சகாப்தத்தில் 3 முக்கியமான அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. முதல் அம்சம் என்பது தொழில்நுட்பத்திற் கான ஈர்ப்பாக உள்ளது. தொழில்நுட்ப பயன்பாட்டில் சாதகமான உணர்வு வளர்ந்து வருகிறது.பரம ஏழைகளும் கூட இதனை பயன்படுத்துகிறார்கள்.
2-வது அம்சம் என்பது கடுமையான பணி செய்பவர்களிடம் நம்பிக்கை கொள்வது. ஏற்கெனவே ஓர் ஆணோ, பெண்ணோ தன்னை தொழில்முனைவோர் என்று சொல்லிக் கொள்வதில் சிரமம் இருந்தது. இவர்களை வாழ்க்கையில் நிலைத்தன்மை பெற்றவர்கள் என்று மற்றவர்கள் கூறுவது வழக்கம்.
3-வது அம்சம் என்பது சீர்திருத்தத்திற்கான மனோநிலை. வலுவான அரசு என்பதன் பொருள் அது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பது என்ற கருத்து ஏற்கெனவே இருந்தது. ஆனால் இதனை நாங்கள் மாற்றியிருக்கிறோம்.
பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை பட்டியலிட்டு பேசிய பிரதமர் மோடி, வலுவான அரசு என்பது அனைத்தையும், அனைவரையும் கட்டுப்படுத்துவது அல்ல, தலையீட்டிற்கான நடைமுறையின் காரணத்தை கட்டுப்படுத்துவது. வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது.
கடந்த ஆண்டில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய செல்போன் தயாரிப்பாளராக இருந்தது. கடந்த ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 83 பில்லியன் டாலராக அதிகரித்தது. உணவுப்பொருள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச உணவுச் சங்கிலியில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமமானது என்றவர் நாட்டில் தொழில்நுட்ப பயன்பாடு பரவலாக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், இல்லத்தரசிகள், சிறுவணிகர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. முந்தைய அரசு அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது, எங்கள் அரசு அதை மாற்றியது.
ஒரு வலுவான அரசால் எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், தனது கொள்கைகளால் மக்களை வழிநடத்திச் செல்ல முடியும். மக்களின் பங்களிப்புக்கு அதிக முக்கியத்துவத்தை வலுவான அரசால் மட்டும் இக்கொடுக்க முடியும். அந்த வகையில், புதிய கல்விக்கொள்கை மூலமாக மாணவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும். புதிய கல்விக் கொள்கை, மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு தருகிறது. இளைஞர்களின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். கட்டமைப்பு துறையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கும் மாணவர்களுக்குமான காலம். மாணவர்களின் கற்றலே இந்தியாவின் கற்றல். மாணவர்களின் வெற்றியே, இந்தியாவின் வெற்றி, மாணவர்களின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. உங்களது வளர்ச்சிக்கான திட்டங்களை நீங்கள் தீட்டும்போது இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து தீட்டுகிறீர்கள். அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் என்று பேசினார்.
இறுதியில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி. முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.