டெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைடுத்து  உடனடியாக அவரை சிறையில் இருந்து  விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
ஊடகம் ஒன்றின் டிபேட்டின்போது, பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா முகம்மது நபியை  விமர்சித்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதிலும் சமூக வலைதளங்களை டெல்லி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர். இதில், பெங்களூரூவில் இருந்து செயல்படும் ஆல்ட் நியூஸ் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர், டிவிட்டரில் செய்த பதிவும் சிக்கியதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இவர்தான், இந்த பிரச்சினையை ஊதி பெரிதாக்கி, இஸ்லாமிய நாடுகளின் கவனத்துக்கு எடுத்துச்சென்று சர்ச்சையை பெரிதாக்கிய குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, இதுகுறித்து ஜுபைரை டெல்லி போலீஸார் விசாரித்தனர். இதில் ஜுபைர் கூறிய பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி அவரை அவர்கள் கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் அழைத்துவிட்டு ஜுபைரை கைது செய்து, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஜுபைரை செய்ததற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. ஜுபைர்மீது உ.பி. உள்பட பல இடங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையில்,  ஜுபைர் ஜாமீன் கோரியிருந்தார். இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும்,  லக்கிம்பூர் கேரி, ஹத்ராஸ், சீதாபூர் ஆகிய ஊர்களிலும் பதிவான வழக்குகளில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் டிவீட் சர்ச்சை வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றாலும் சிறையிலேயே இருக்கும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், ஜுபைர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  முகமது ஜுபைருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் தொடரப்பட்ட 6 வழக்குகளிலும் இடைக்கால ஜாமின் வழங்கியதுடன், அவரை உடனே வெளியே விடும்படி அறிவுறுத்தி உள்ளது.