சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் கல்வி யாளர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாடு எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்யும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது. தேசிய தேர்வுகளை எதிர்கொள்ள பயந்து மாணாக்கர்கள் தற்கொலை ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், தனியார் கல்வி நிறுவனங்களின் படிக்கச்சொல்லி துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமைகள் போன்ற காரணங்களால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பள்ளி மாணவர்கள் 3பேர் பள்ளி வளாகத்திலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை முடிவை நாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், மேச்சேரி, அமரம் கிராமத்தை சேர்ந்த 16வயது மாணவி மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவர் வகுப்பறையில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு, பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இஷிகாந்த் (வயது 16) +1 வகுப்பில் பயின்று வருகிறார். இவர் பள்ளியின் 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்தார். காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்கட்ட விசாரணையில் பள்ளி ஆசிரியர் மாணவனை அடித்ததால் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி கடந்த 7 நாட்களில் மட்டும் 3மாணவ, மாணவிகள் பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது பள்ளி ஆசிரியர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் படிப்பு குறித்தோ, எதிர்காலம் குறிந்தோ நடவடிக்கை எடுப்பதிலலும், அவர்களின் தரத்தை உயர்த்துவதிலோ ஆர்வம் காட்டுவதை விட்டுவிட்டு தயங்கும் நிலை உருவாகி உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல மருத்துவர்கள், மாணவர்கள், படிப்பு… படிப்பு என்று மதிப்பெண்ணை மட்டுமே வாழ்க்கை என்று நோக்கி நகரும்போது மனவலிமையை இழக்கிறார்கள். கல்வி என்பது மாணவர்களுக்கு ஆளுமையை வளர்க்க உபயோகப்பட வேண்டும்
ஆனால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டாமல் மதிப்பெண் பெறுவதை மட்டுமே வாழ்க்கை என்று வழிகாட்டுகிறார்கள். இதனால் பள்ளிகளில் கல்விசாரா திறனை மேம்படுத்துவதற்கான (Extra Curricular activities) வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. இதற்கான வாய்ப்புகள் இருந்திருந்தால் கல்வி ஆர்வம் குறைந்தாலும் இதர திறமைகளை வளர்ப்பதில் அதிகளவில் கவனம் செலுத்தி மாணவர்கள் முன்னேறுவார்கள், தற்கொலை போன்ற எண்ணங்கள் மனதில் வளர இடங்கொடுக்க மாட்டார்கள். ஆனால் அரசு பள்ளி மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் எக்ஸ்ட்ரா கரிகுலர் அக்டிவிட்டி என்பதையே மறந்துவிட்டன. படிப்பு, மதிப்பெண் மட்டுமே குறிக்கோளாக செயல்படுகின்றன.
பெரும்பாலான பள்ளிகளில், ஓவிய ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருப்பதில்லை. அவர்களை உடனே நியமித்து, ஒவ்வொரு மாணவர்களிடமும் உஙளள தனி ஆளுமைத் திறன்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்திட வேண்டும். ஆனால், பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்களுக்குத் தேர்ச்சி என்பதை மட்டுமே வைத்துச் செயல்படச் சொல்வதால் இதர விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் மதிப்பெண் பெறும் இயந்திரமாக மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். இதனால் கடுமையான மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள் தற்கொலை முடிவை நாடுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.
தமிழக மாணாக்கர்களிடையே தற்கொலை நடவடிக்கைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், நமது பாடத்திட்டமும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விட முடியாது. இதுமட்டுமின்றி சமீபகாலமாக, கல்விக் கூடங்களில் அதிகரித்து வரும் சாதி, மத பாகுபாடு களையப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்க ஏற்படுவதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அனைவருக்கும் சமமான கல்வி வழங்குவதை உறுதி செய்வதுடன், ஆசிரியர்களின் ஒழுக்க நடவடிக்கையும் கண்காணிக்கப்பட வேண்டும்.
பழைய காலத்து செகன்டிகிரேடு (வெறும் ஆசிரியர் பயிற்சி மட்டும் முடித்த ஆசிரியர்கள்) ஆசிரியர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு, தற்காலத்திற்கு ஏற்றவாறு பட்டப்படிப்பு படித்த திறமையான, தகுதியான ஆசிரியர்களை பணி அமர்த்தி கல்வி போதிக்க வேண்டும்.
தற்போதைய பாடங்களை முழுமையாக நடத்த தெரியாத நிலையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் பல ஆயிரம் ஆசிரியர்கள், தங்களால் முடியாத நிலையிலும், தள்ளாத வயதில் பள்ளிக்கு வந்து படுத்து தூங்கிவிட்டு செல்கிறார்கள். பல கிராமங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராமல், படித்த இளைஞர்களைக்கொண்டு, சில ஆயிரம் சம்பளத்தில் மாணவர் களுக்கு பாடம் எடுக்கும் அவலமும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதை தமிழகஅரசு கண்காணித்து உடனே களைய வேண்டுமி.
இதுமட்டுமின்றி தற்போதைய டிஜிட்டல் வளர்ச்சி, செல்போன் பயன்பாடு போன்றவற்றால், இளம் தலைமுறையினர், குறிப்பாக பள்ளி மாணாக்கர்களிடையே ஒழுக்கம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. அதுமட்டுமின்றி மாணாக்கர்களை கட்டுப்படுத்த வேண்டிய ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டு, கண்டிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதும், மாணாக்கர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வி இன்று வணிகமாயமாகி விட்டதால், அதில் வருமானத்தை பெறும் நோக்கில் கல்வி நிறுவனங்கள் மாணாக்கர்களை அதிக மதிப்பெற வலியுறுத்தி டார்ச்சர் செய்வதும் மேலும் ஒரு காரணமாக உள்ளது.
தமிழகஅரசு இதை கருத்தில்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, இனிவரும் காலங்களிலாவது, மாணாக்கர்களின் தற்கொலை முயற்சியை தடுக்கலாம்… இல்லையேல் தமிழகஅரசு தற்கொலை மாநிலமாக மாறிவிடும் என்பதை மறுக்க முடியாது…. செய்யுமா தமிழகஅரசு…