திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் என்ற எம்எல்எம் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தொடர்பு உடைய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வீடு உள்பட 10 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் எல்பின் என்ற எம்எல்எம் நிறுவனம் மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். இந்த நிறுவனத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தலைமை ஏற்று, குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியது.
திருச்சியில் உள்ள எல்பின் நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருச்சி மாநகராட்சியின் 17வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் இல்லத்தில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது மாமியார் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த மாபெரும் மோசடியில் நிர்வாகத்துடன் தொடர்பில் இருந்த விசிக கவுன்சில் பிரபாகரனுக்கம் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, கவுன்சிலர் பிரபாகரனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கவுன்சிலர் பிரபாகரன் திருச்சி மாநகராட்சியின் 17வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர்மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக் கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எல்பின் நிறுவனம் தொடர்பான மோசடி வழக்கு தொடர்பாக, பிரபாகரன் வீடு உள்பட அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் எல்பின் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக தமிழகம் முழுவதும் மொத்தமாக 10 இடங்களிலும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திருச்சி எல்பின் சகோதரர்கள் ராஜா, ரமேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட 10 பிரிவுகளில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.