சென்னை: அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்தார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திமுக தலைமையிலான ஆட்சியை சரமாரியாக விமர்சித்த சிலமணி நேரங்களுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதி, “திமுகவுக்கும் அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று நடந்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது (இபிஎஸ்) கோபம் தவறானது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே நடைபெற்ற  மோதல், அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்துக்கொண்டு ஓபிஎஸ் உள்ளே சென்றது, இதுபோன்ற செயல்களை காவல்துறையினர் வேடிக்கை பார்த்தது, பின்னர் இறுதியில் தடியடி நடத்தியது போன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு அவசரம், அவசரமாக சீல் வைப்பு போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி தரப்பு காவல்துறையில் புகார் கொடுத்தும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை, இதற்கு தமிழகஅரசும், காவல்துறை யினரும்தான் பொறுப்பு என இபிஎஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது,  யாருடைய அழிவிலும் திமுக இன்பம் காணாது என விளக்கம் அளித்தார்.

எதற்கெடுத்தாலும் திமுகவை தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகிவிட்டது அதிமுகவுக்குள் நடக்கும் சண்டைக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியவர், சட்டம்-ஒழுங்கு எங்கும் மீறப்பட வில்லை, உடனடியாக 144 போடப்பட்டது. சட்டம், ஒழுங்கு காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த ஈபிஎஸுக்கு தெரியாதா?  என கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்களா? என கேள்வி எழுப்பியவர்,  அதிமுக செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள் என்று கூறினார்.