சென்னை: பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா டிவிட் பதிவிட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். “என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள், இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காக பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர்; அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி” என கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்கள் பதவி உள்ளது. இந்த பதவிகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, கேரளாவைச் சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து இளையராஜாவை வாழ்த்தி டிவிட் போட்ட பிரதமர் நரேந்திர மோடி, “சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர் இளையராஜா. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர்மோடியின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள டிவிட்டரில் பதிவிட்டுள்ள இளையராஜா, “மோடிஜியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இளையராஜூக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் உள்பட அரசியல் கட்சியினர், திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்கள் சமுக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த நிலையில், வாழ்த்து கூறிய அனைவருக்கும் இளையராஜா நன்றி தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் . உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி… from Seattle, USA என தெரிவித்து உள்ளார்.
இசைஞானி இளையராஜா, சுமார் அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். 80ல் அவரது பாடல்கள் உச்சம்பெற்ற நிலையில், இன்றுவரை தனது அசாத்திய திறமையால் தனக்கென ரசிகர்களை கொண்டுள்ளார். சொல்லப்போனால், தமிழக இசையுலகை அரசாட்சி செய்து வருகிறார் என்றே கூற வேண்டும். சுமார் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார்.
அவரது இசையை போற்றும் விதமாக மத்தியஅரசு அவருக்கு 5 முறை தேசிய விருதுகளை கொடுத்து கவுரவித்துள்ளது. fடந்த 2010 ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
தற்போது 79 வயதாகும் இளையராஜாவை இந்திய அரசு பாராளுமன்ற மேலவையின் நியமன எம்.பி.யாக நியமித்து கவுரவப்படுத்தி உள்ளது.