நெல்லை: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகளை பக்தர்கள் காணிக்கையாக கொடுத்துள்ளனர். தமிழக வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (Nellaiappar Temple). இத்தலம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்றது என விளங்குகிறது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து அம்பலங்களில், ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயமும் ஒன்று. இது தாமிர அம்பலமாக கருதப்படுகிறது. இத்திருக்கோவிலில் வளர்க்கப்படும் காந்திமதி என்ற பெண்யானை அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.

தனது 13 வயதில் கோவிலுக்கு சேவையாற்ற வந்த காந்திமதிக்கு தற்போது வயது 52. வயது முதிர்வு காரணமாக கால்வலி, மூட்டு வலி என பல நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளது. காந்திமதியை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், அதன் எடையை குறைக்க வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து நாள்தோறும் யானையை நடைப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், அதன் எடை சுமார் 150 கிலோ வரை குறைக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்த, தற்போது காந்திமதியின் எடை வயதுக்கு ஏற்ற அளவு சரியான இருந்தாலும், அதனால்  யானை நீண்ட நேரம் நடப்பதற்கும், நிற்பதற்கும் முடியாமல் திண்டாடுகிறது.

இதையடுத்து,  காந்திமதிக்கு கால் வலி ஏற்படாமல் இருக்கவும், மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ குணம் வாய்ந்த செருப்புகளை ரூ.12 ஆயிரம் செலவில் தயாரித்து பக்தர்கள் யானைக்கு அணிவித்து உள்ளனர். இது பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது.

தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கோவில் யானைக்கு செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள  நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில்  என்பது குறிப்பிடத்தக்கது.