சென்னை:  தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கூறிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கொரோனா அதிகரித்து வருவதால், கோவிட் கேர் சென்டரை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசானது உலகின் 110 நாடுகளில் பரவி இருப்பதாக கூறியவர், அதை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அந்தத் துறையின் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  “கடந்த 2 வாரங்களில் கொரோனா பரிசோதனையானது 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பானது இணை நோய் உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது, நோயின் பரிணாம வளர்ச்சியால் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஒரு குடும்பத்தில் அதிக நபர்கள் இருக்கும் போது அனைவரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக நேர்கிறது.

தற்போது தடுப்பூசி போடப்பட்டு ஓராண்டு ஆகியதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. இதனால், 10-க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதுமட்டுமில்லாமல், கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும்,  தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கூறியவர்,  கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது , தொற்று பரவல் மேலும் அதிகமானால், கோவிட் கேர் சென்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல் தாமாகவே மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது; இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அவ்வாறு செய்தால் மேலும் பாதிப்பு அதிகமாகும் வாய்ப்பு உள்ளது, அதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.