நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
கேள்விப்பட்ட பெயர்தான். ஆனால் சாதனைகள் தெரியாது..
மனோகரா, மிஸ்ஸியம்மா, இருவர் உள்ளம் போன்ற காவியங்களெல்லாம் இவர் இயக்கத்தில் உருவானவைதான். .
இந்தியில் கமல் நடித்து வட இந்திய நட்சத்திரங்களை அலறவைத்து ஓராண்டு ஒடிய ஏக் தூஜே கேலியே படத்தை தயாரித்தவரும் இவர்தான்.
அதற்கு முன்பே இந்தியில் சஞ்சீவ் குமார் நடிப்பில் வெளுத்து வாங்கிய கிலோனோ, (தமிழில் எங்கிருந்தோ வந்தாள்) மிலன் (தமிழில் பிராப்தம்) போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தவர்..
எல்விபிரசாத் அவர்களின் பெருமைகளை அவ்வளவு சுலபத்தில் பட்டியலிட்டு விட முடியாது. தென்னிந்திய மாபெரும் சூப்பர்ஸ்டாரான என்.டி.ராமராவை மனதேசம் (1948) என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். எஸ்.வி.ரங்காராவ். பாடகர் கம் இசை யமைப்பாளர் கண்டசாலாவும் இவரால்தான் தலை தூக்கி காட்டப்பட்டவர்கள்.
அவ்வளவு ஏன் நடிகையர் திலகம் சாவித்திரியை முதன் முதலாய் கதாநாயகியாக ஆக்கியவர். 1907 ல் பிறந்த இவரின் வாழ்க்கை பயணம் என்று பார்த்தால் வியப்பாகவே இருக்கும். திருமணமாகி பக்கத்தில் இளம் மனைவி, திவாலாகி விட்ட அப்பா, ஒட்டுமொத்த குடும்பமே வறுமையில், இப்படி தத்தளித்த போதுதான் ஆந்திர கிராமத்திலிருந்து மும்பைக்கு ஓடினார் இளைஞராக இருந்த எல்.வி. பிரசாத்..
ஒடிப்போனவரிடமிருந்து எந்த விவரமும் பல மாதங் களாகியும் வராததால் ஒருவேளை தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று ஊரே முடிவுகட்டி, அத்தோடு மறந்தும் போனது.. இப்படிப்பட்ட நிலையில்தான் எடுபிடி வேலையிலிருந்து ஊமைப்படங்களில் துணை நடிகன் என்ற அந்தஸ்தை எட்டினார. இந்திய சினிமாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா விலும் தமிழில் பேசும் தமிழ்படமான காளிதாஸ் படத்திலும் எங்கோ ஒரு மூலையில் வந்துபோனார் பிரசாத்.
இந்த காலகட்டத்தில் நடிகர் ராஜ்கபூரின் தந்தையான பிரிதிவிராஜ் கபூர் உடன் பிரசாத்துக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு இந்தி திரை உலகில் பிரசாத்தின் வேகத்தை அதிகரித்தது என்றே சொல்லலாம். 15 ஆண்டுகால துரத்தலில் இயக்குநர் என்ற இடத்தையும் பிடித்தார் பிரசாத்.. இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நன்றாகவே கோலேச்ச ஆரம்பித்தார். உதவி இயக்குநர், நடிகன், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய தூண்களில் ஒருவராக திகழ்ந்து மரியாதைக்குரியவராகவும் உயர்ந்தார் எல்.வி.பிரசாத்.
இன்று நமது நாட்டின் பெரு நகரங்கள் அனைத்திலும் சினிமா துறையினருக்கு லேப் என்றால் இவர் பெயரில் உள்ள இடங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும்..
திரையுலகிற்கான அரசின் மிக உயர்ந்த தாதா பால்கே விருது இவரை தேடிவந்தது பெரிய விஷயமே அல்ல..
எஸ்.எஸ்.வாசன், ஏவிஎம். நாகிரெட்டி போல ஜாம்பவான்கள் வரிசையில் இடம் பிடித்த எல்.வி. பிரசாத்தின் 28 வது நினைவு தினம் இன்று
(கமலின் ராஜபார்வை படத்தில் மாதவியின் தாத்தாவாக வந்து வெளுத்து வாங்கியவர்தான் இந்த எல்.வி.பிரசாத்)