தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சாமி சிலைகள் உடைப்பு, கோயில்கள் உடைப்பு என்பது தொடர்கதையாகி வருகிறது. அது ‘மர்ம நபர்கள்’ என்ற சிலரால் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்படும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தற்போது, மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
சுங்குவார்சத்திரம் அடுத்த துலசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவாக்கம் கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த விநாயகர் சிலை, நவக்கிரக சிலைகளை உடைத்து சேதப்படுத்தி தூக்கி வீசியுள்ளனர். அதுபோல, அந்த பகுதியில் உள்ள மற்றொரு கோவிலான, ஸ்ரீலட்சுமி அம்மன் கோவிலில் பிரகாரத்தின் வெளியில் உள்ள அம்மன் சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர். 2 கோவில்களிலும் இருந்த நவக்கிரக சிலைகள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்ளிட்ட 22 சிலைகள் பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்து சேதப்படுத்தி தூக்கி வீசப்பட்டு உள்ள.
இதைக்கண்ட அந்த பகுதி மக்கள் கொதித்தெழுந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பலை கைது செய்யக்கோரி 50-க்கும் மேற்பட்டோர் எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், சாமி சிலைகளை சேதப்படுத்திய நபர்களை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி. சுனில் சிலைகள் உடைக்கப்பட்ட கோவில்களை பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். சுங்குவார் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கிலாவது காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மதமோதல்களை தூண்டும் இதுபோன்ற நாசகார செயல்களில் ஈடுபடுபவர் களை காவல்துறையினர் கடுமையாக தண்டிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.