சென்னை:
12 பேருக்கு உருமாறிய ஒமிக்கிரான் பாதிப்பு இருப்பதை அடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4,270பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 4,041 பேருக்கும், நேற்று 3,962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 76 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 15 பேர் பலியாகியுள்ள நிலையில் கொரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,692ஆக அதிகரித்துள்ளது. தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியுள்ளது.அதன்படி, 15 நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட புதிய வகையான BA4 வகை கொரோனா 4 பேருக்கும்,BA5 வகை கொரோனா 8 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் நலமாக உள்ளனர். இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.