தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளரவிடுவது அதிமுகவுக்கும் திராவிட கொள்கைகளுக்கும் நல்லதல்ல என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பேரவை நிர்வாகிகளுக்கு செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது அதில் கலந்து கொண்ட பொன்னையன் இவ்வாறு பேசியுள்ளார்.
பாஜக, அதிமுகவின் கூட்டணி கட்சி தான் என்றாலும்கூட அக்கட்சி தமிழகத்தில் வளர்வது என்பது அதிமுகவுக்கு, திராவிட கொள்கைகளுக்கு, தமிழக நலனுக்கு நல்லது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. தமிழக உரிமைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படுகிறது.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் கர்நாடக பாஜக-வை தமிழக பாஜக கண்டிக்காமல் மௌனம் காக்கிறது என்றும் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் தோல்வி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தோல்வி என்று தொடர் தோல்விகளை அடுத்து ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக மௌனம் காத்துவருகிறது அதிமுக.
இந்த நிலையில் தமிழக நலனுக்காக மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக செயல்பட்டால் தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கவலையில் உள்ள தலைமைக்கு பொன்னையனின் பேச்சு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.