சென்னை:  தேர்தல் வாக்குறுதி திட்டங்களின் நிலை உள்பட தமிழகஅரசு அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து  19 அரசுத்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். 2 நாள் நடைபெறும் இந்த ஆய்வு கூட்டம் இன்று காலை தொடங்கியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு செயலாளர்கள் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் மூலம் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டத்தில் இன்று மற்றும் நாளை 2 நாட்கள் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்துதுறை செயலாளர்கள், கிளை செயலாளர்கள், தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். 19 துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள்  கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நகராட்சி, நீர்வளம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்துறை, தொழில்துறை உள்ளிட்ட 19துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஓராண்டு ஆட்சி முடிந்த நிலையில் பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளின் நிலை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து அறிவிப்புகளும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் இந்த ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.