டெல்லி: நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக 2,000 ரூபாய் நோட்டுகள் கண்ணில் தென்படுவதில்லை. எங்கு பார்த்தாலும் ரூ.500 நோட்டு மட்டுமே காணப்படுகிறது. இது மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்திய நிலையில், ரூ.2000 நோட்டுக்கள் புழக்கம் குறைந்தது ஏன்? என்பது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு இந்திய மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ரூ. 500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். பழைய ரூபாயை கொடுத்துவிட்டு புதிய ரூபாய் மாற்றுவதில் கடும் சிக்கல் எழுந்தது. பலர் உயிரிழந்த சோகங்களும் அரங்கேறின.
இதைத்தொடர்ந்து, 4 நாட்களில் 2,000 ரூபாய் நோட்டு அறிமுகமானது. அப்போது வங்கிகளிலும், ஏடிஎம்களிலும், 2,000 ரூபாய் நோட்டுக்கள் தான் அதிகம் கிடைத்தன.தி இதைத்தொடர்ந்து மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பியது. இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது.
இப்போது 2,000 ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பது அபூர்வமாகிவிட்டது. ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை இது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில், அதற்கான காரணம் ஏன் என்பதை இந்திய ரிடர்வ் வங்கி விளக்கியுள்ளது
மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் புழக்கத்தில் இருந்த மொத்த கரன்சிகளுக்கு எதிராக புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 2 சதவீதமாக இருந்ததில் இருந்து, தற்போது 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால்தான் ஏடிஎம்களில் 2000 நோட்டுகள் மிக அரிதாக கிடைக்கின்றன.
2,000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் இறுதி வரையிலான காலகட்டத்தில், மொத்த கரன்சி நோட்டுகளில் அவர்களின் பங்கு 214 கோடி அல்லது 1.6 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை அனைத்து மதிப்பிலான நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 13,053 கோடியாக இருந்தது. இதற்கு ஓராண்டுக்கு முன், இதே காலத்தில், இந்த எண்ணிக்கை, 12,437 கோடியாக இருந்தது. புழக்கத்தில் குறைவாக இருந்தாலும் ரூ.2000 ஆயிரம் நோட்டு மீண்டும் அச்சிடப்படாது என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்து விட்டது.
ஆண்டறிக்கையில், “இந்தியாவில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி தயாராகி வருகிறது. CBDC இன் வடிவமைப்பு, பணவியல் கொள்கை, நிதி நிலைத்தன்மை மற்றும் பணம் மற்றும் கட்டண முறைகளின் திறமையான செயல்பாடு ஆகியவற்றின் கூறப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில், சப்ளை தொடர்பான தடைகளை நீக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும், மூலதனச் செலவை அதிகரிக்கவும் பணவியல் கொள்கையை சீர் செய்வதன் \ மூலம் எதிர்கால வளர்ச்சிப் பாதை தீர்மானிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளது. “இந்தியாவின் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்த, நிலையான, சமநிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் முக்கியமானவை” என்று அறிக்கை கூறியுள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வாகன எரிபொருட்கள் மீதான கலால் வரி குறைப்பு, எஃகு மற்றும் பிளாஸ்டிக் தொழிலில் பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை நீக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு சமீபத்தில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எரிபொருள்கள், காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வால் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 15.08 சதவீதத்தை எட்டியது. அதே நேரத்தில், சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதத்தை எட்டியுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இந்த மாதம் ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் அதிகரித்து 4.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.