புதுடெல்லி:
2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா-பங்களாதேஷ் இடையே இன்று முதல் விரைவு ரயில்கள் சேவை தொடங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக, இந்தியா – பங்களாதேஷ் இடையிலான 3 ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, இரு நாடுகளிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால், இன்று முதல் இந்தியா – பங்களாதேஷ் இடையே பயணிகள் விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கொல்கத்தா – டாக்கா இடையே, கொல்கத்தா மைத்ரீ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், கொல்கத்தா – குல்னா இடையே கொல்கத்தா பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இன்று மீண்டும் தொடங்குகிறது. மேலும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நியூ ஜல்பைகுரியில் இருந்து டாக்கா வரை மிதாலி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளிலும் உள்ள பயணிகள் பயனடைவார்கள் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – பங்களாதேஷ் இடையே ரயில் சேவை தொடங்குவதால் இருநாட்டு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.