ருமபுரம்

ருமபுரம் ஆதின பட்டினப்பிரவேச நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்துள்ளது.

மயிலாடுதுறைக்கு அருகில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது.  இங்கு ஆண்டுதோறும் மடத்தைத் தோற்றுவித்த குரு முதல்வர் குருஞான சம்பந்தர் குருபூஜை விழா, சமய பயிற்சி வகுப்புகள், திருநெறி தெய்வத் தமிழ் மாநாடு, கருத்தரங்கம், ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா என பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா மே 12-ம் தேதி தொடங்கியது.  விழாவின் 11-ம் திருநாளான நேற்று பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது.  நேற்று காலை சொக்கநாதர் பூஜை, குரு பூஜை நடைபெற்றது.  குருஞான சம்பந்தர் சிலைக்குத் தருமபுரம் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்து, ஞானபுரீஸ்வரர், தருமபுரீஸ்வரர் கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார்.

நேற்று பிற்பகல் மாகேஸ்வர பூஜை, மேல குருமூர்த்தியில் வழிபாடு ஆகியவை நடைபெற்றன.  அதைத் தொடர்ந்து நேற்று இரவு திருக்கூட்ட அடியவர்கள், சிவனடியார்கள் புடைசூழத் தருமபுரம் ஆதீன திருமடத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் அமர்ந்து, தருமபுரம் ஆதீன திருமடத்தின் வீதிகளை வலம் வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது.

யானைகள் முன் செல்ல, மங்கல வாத்தியங்கள் முழங்க,  பல்லக்கில் அமரவைத்து ஆதீனகர்த்தரை பக்தர்கள் சுமந்து வந்தனர்., தருமபுரம் ஆதீன திருமட வீதிகளில் வீடுகள் தோறும் மக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு, ஞான கொலுக்காட்சியில் ஆதீனகர்த்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

விழாவில், மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருக்கைலாயப் பரம்பரை செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாச்சாரிய சுவாமிகள், துழாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய ஞானப் பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகம் உள்ளிட்ட  அமைப்புக்கள் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்ததால், காவல் கண்காணிப்பாளர்கள் என்.எஸ்.நிஷா (மயிலாடுதுறை), ஜி.ஜவகர் (நாகப்பட்டினம்) ஆகியோர் தலைமையில் 600-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நேற்று கருப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 97 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.