திருவள்ளூர்: செருப்பை தலையில் சுமந்து சென்ற சமூதாயத்தினரை மேயர் பதவியில் அமர வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் என லியோனி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேயர் பிரியாராஜனை மனதில் வைத்து அவர் பேசினாரா என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டம்  திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரியில் நடைபெற்றது. இந்த கூட்டதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு பாடநூல்  கல்வியில் பணிகள் கழக தலைவரும், திமுக நட்சத்திர பேச்சாளருமான  திண்டுக்கல் ஐ லியோனி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, திமுக அரசின் ஓராண்டு சாதனையை நூறு ஆண்டுக்கு இணையான சாதனையாக தளபதியார் படைத்துள்ளார் என்று கூறியவர்,  பெண்களுக்கு முதல் முதலில் ஓட்டு உரிமையை பெற்றுத் தந்தது நம் தாய் கட்சி நீதிக்கட்சி. பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சொத்துக்களில் சம உரிமை வாங்கி கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். இன்று, செருப்பை தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமூதாயத்தினரை மேயர் பதவியில் அமர வைத்தவர் முதல்வர் ஸ்டாலின் என்று கூறினார்.

லியோனியின் பேச்சு அங்கிருந்த திமுகவினரை முகம்சுளிக்க வைத்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் லியோனி பேசினார்.  பெண்களுக்கு அரசியலில் 50 சதவிகிதமும் 21 மேயர்களில் 11 மேயர்கள் பெண்களாக நிலைநிறுத்தி காட்டி பெண் விடுதலைக்காக பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாரதியை போல ஆட்சி நடத்துகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தளபதி யாரை காட்டுகிறாரோ அவர்தான் இந்நாட்டின் பிரதமர்” என தெரிவித்தார்.

திண்டுக்கல் லியோனியின் மேயர் தொடர்பான பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேயர் பிரியாராஜன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பமும்  இசை வேளாளர் குடும்பத்தை சேர்ந்ததுதான். அதனால்தான் பிரியாவுக்கு மேயர் பதவி கொடுக்கப்பட்டதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், திண்டுக்கல்  லியோனி,  செருப்பை தலையில் சுமந்த சமூதாயத்தினர் இப்போது மேயர் என்று பேசியது, சென்னை மேயர் பிரியா ராஜனை நினைவில் வைத்துக்கொண்டு பேசினாரா என கேள்வி எழுப்பப்பட்டு சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி வருகிறது.