சென்னை: மாநில அரசின் உரிமையானது பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என செய்தி யாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. பேரறிவாளன் விடுதலையானதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இது நீதி – சட்டம் – அரசியல் – நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என்றும் தமிழ்நாடு அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று இந்த இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மாநில அரசின் உரிமையானது பேரறிவாளனின் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்ட பட்டிருக்கிறது. மாநில அரசின் கொள்கை முடிவுகளில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என மாண்புமிகு நீதியரசர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். ஆளுநர்கள் செயல்படாத போது நீதிமன்றம் தலையிடும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக இதை பார்க்கிறோம். மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் எடுத்த அனைத்துக்கும் கிடைத்த வெற்றிதான் இந்த தீர்ப்பு.
அற்புதம்மாள் தாய்மையின் இலக்கணம். பெண்மையின் திண்மையை அவர் நிரூபித்து உள்ளார். சட்டத்தின் ஷரத்துக்களை செல்லும் திறன், ஒருதுளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதை காலம் சுட்டிக்காட்டி உள்ளது.
மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகார இல்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருப்பது மிக மிக முக்கியமானது என்று கூறியதுடன், தமிழ்நாடு அரசால், இந்தியா முழுமைக்குமான மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த வெற்றி இது என்றார்.
மேலும் பேரறிவாளன் என்ற தனிமனிதனின்விடுதலை மட்டுமல்ல என்று கூறியவர், மாநில சுயாட்சிக்கு இலக்கணமாக அமைந்துள்ள இந்ததீர்ப்பு மீண்டும் வரலாற்றில்நினைவு கூரத்தக்கது என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி சட்ட ஆலோசனை நடத்தி மற்ற ஆறு பேரையும் விடுவிக்க முயற்சி எடுப்போம்.
இவ்வாறு கூறினார்.