சென்னை: பேருந்துகளில் டிஜிட்டல் கட்டணம், பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகள் தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் உருவாக்கி உள்ள செயலியின் (App) பயன்பாட்டை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
சமீபத்தில், சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயங்கும் இடம், புறப்படும் மற்றும் எவரும் நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாக தமிழக போக்குவரத்துத் துறை வடிவமைத்த ‘சென்னை பஸ்’ என்ற செயலி பயன்பாட்டை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், அரசு பேருந்துகளில் டிஜிட்டல் கட்டணம், பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதி, போக்குவரத்து நெரிசல், பேருந்துகளால் ஏற்படும் நஷ்டம், எரிபொருள் சிக்கனம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவெங்கடேஷ்வரா பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் குவைத்தைச் சேர்ந்த கல்ஃப் என்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து புதிய செயலி (App) ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இந்தசெயலியின் தொடக்க விழாவில், தமிழக அரசின் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், கலந்துகொண்டு செயலியின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வாழப்படி இராம. சுகந்தன், கல்ப் என்ஜினியரிங் துணைத்தலைவர் மீனா கலந்துகொண்டனர்.
இந்த செயலியின் பயன்பாடு குறித்த அறிந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தனது துறை அதிகாரிகளிடம் இந்த டெமோவை பார்க்க அறிவுறுத்துவதாகவும், அவர்கள் அதைப்பார்த்து உடன்பாட்டிற்கு வந்தால், வரும் காலத்தில் தமிழகத்தில் பயன்படுத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.