ராஜபாளையம்: சர்ச்சுக்கு வந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சேட்டை செய்த ராஜபாளையம் பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாடு முழுவதும் பாலியல் சேட்டைகள் அதிகரித்து வருகின்றன. ஆன்மிகவாதிகள் முதல் ஆசிரியர்கள் வரை அனைத்து தரப்பினரும் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை அனைத்துவகை பெண்களிடமும் பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பல சட்டங்கள் இருந்தாலும், கடுமையான தண்டனை வழங்கப்படாததால், இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் சேட்டை செய்த பாதிரியார் ஜோசப் ராஜா கைது செய்யப் பட்டு உள்ளார். இவர் ராஜபாளையம், வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சர்ச் பாதிரியாராக இருந்து வருகிறார். இந்த தேவாலயத்துக்கு ரெகுலராக வந்துசெல்லும், அதே பகுதியயைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றி 14வயது சிறுமியிடம் பாதிரியார் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதை கண்ட சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததில், அவர் கொடுத்த தகவலின்படி, பாதிரியார்தான் இந்த பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அதிர்ச்சி அடைந்ந்த சிறுமியின்தாய், உடனே மகளை அழைத்துக் கொண்டு ராஜபாளையம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. சிறுமியின் உடலில் இருந்த காயங்களை கண்ட இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உடனே வழக்கு பதிவு செய்து, பாதிரியார் ஜோசப் ராஜாவை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிரியார் மீது ‘போக்சோ’ உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
பாதிரியார் பாலியல் சேட்டை செய்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.