உதயப்பூர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் சிந்தன் ஷிவிர் (சிந்தனை அமர்வு) மாநாடு இன்று மதியம் ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் தொடங்கு கிறது. இதையொட்டி, அங்கு வந்த காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுலுக்கு, காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, உட்கட்சி தேர்தல் மேலும் கட்சியின் அனைத்து அமைப்புகளின் பதவியிலும் பல்வேறு பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கும் வகையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சிந்தன் ஷிவிர் 3 நாள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு இன்று ( 13-ம் தேதி) பிற்பகல் தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொளள நாடு முழுவதும் இருந்து மூத்த மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், மாநில நிர்வாகிகள் என 400க்கும் மேற்பட்டோர் உதய்ப்பூர் சென்றுள்ளனர்.
முன்னதாக சிந்தனை அமர்வு (சிந்தன் ஷிவிர்) மாநாடு தொடர்பாக அரசியல், பொருளாதாரம், சமூக நீதி, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் கட்சி விவகாரம் ஆகிய 6 அம்சங்கள் குறித்து வரைவு அறிக்கை தாக்கல்செய்ய தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவின் அறிக்கை பற்றி உதய்பூர் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும், இந்த மாநாட்டில், ராகுல் காந்தியை மீண்டும் கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற காரியகமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “கட்சிக்குள் உள்ள குறைகளை மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டலாம். ஆனால், அது தன்னம்பிக்கை, மன உறுதியை சீர்குலைக்கும் வகையில் இருக்கக்கூடாது. கட்சியில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். கட்சிக்கு புத்துயிரூட்டவும் ஒற்றுமையை உறுதி செய்யவும் உதய்பூர் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாநாடு தொடங்குகிறது. இதையொட்டி, காங்கிரஸ் ராகுல் காந்தி கட்சி நேற்று மாலை டில்லியிலிருந்து உதய்பூருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டர். டெல்லி சராய் ரோஹில்லா ரயில் நிலையம் வந்த அவரை, வழியனுப்பிவைக்க காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் நிலையத்தை சூழ்ந்தனர். அப்போது, ரயில் நிலையத்திலிருந்த தொழிலாளிகள் ராகுல் காந்தியுடன் உரையாடினர். தொடர்ந்து உதய்ப்பூர் சென்றடைந்த ராகுலுக்கு காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ (சிந்தன் ஷிவிர்) மாநாடு உதயப்பூரில் நாளை தொடங்குகிறது!