சென்னை: சென்னை புரசைவாக்கம் பகுதியில் காவல்துறையினரின் கடுமையாக தாக்கதலால் உயிரிழந்த விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் உள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை மீண்டும் நினைவுபடுத்தி உள்ளது.
சென்னையில் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது தகராறு ஏற்பட்ட கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி விக்னேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் தாக்கியதால்தான் அவர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தமிழக முதல்வரும் மறுப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் விளக்கம் கூறினார்.
ஆனால், விக்னேஷ் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்படடது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இந்த விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹெல்டர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விக்னேஷின் மரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை எனச்சொல்லி தமிழக அரசு மூடிமறைக்கப் பார்த்தது. ஆனால், அந்த ஆவணத்தை டெல்லியில் இருந்து புறப்படும்பொழுது, எடுத்து வந்து இருக்கிறோம். அவரது சகோதரர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பது தற்போது காவல் துறையிடம் கொடுத்துள்ளோம். விக்னேஷ் மரணம் குறித்து சிபிசிஐடி அறிக்கை தரவேண்டும்: விக்னேஷின் மரணத்திற்கு யார் காரணம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் வெளி வர வேண்டியிருக்கிறது. தற்போது மூன்று காவல் துறையினரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
விக்னேஷ் மரணத்தின்போது, யார் யாரெல்லாம் அப்போது பணியில் இருந்தார்களோ அவர்கள் மீதும் நடவடிக்கை தேவை. அதுபோல விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கையினை சேர்த்து, நாங்கள் ஒரு அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்வோம் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், தமிழ்நாட்டில் சாதிப் பிரச்னை அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஒரு அமைச்சரே (ராஜ கண்ணப்பன்) சாதிப் பெயரை சொல்லி திட்டுகிறார். ஆனால், அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக ஆக்கியுள்ளனர். இப்படிப்பட்ட நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த இரு வழக்குகள் குறித்தும் 15 நாட்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறோம்” என்றார்.
இந்த பரபரப்பான சூழலில் விக்னேஷ் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்படடது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் விசாரணை கைதி விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, விக்னேஷின் தலை, கண், உடல் முழுவதும் ரத்தம் கட்டிய காயங்கள், இடது கை, முதுகின் வலது பக்கத்தில் காயம், வலது முன்னங்காலில் எலும்பு முறி உள்பட 12 இடங்களில் பலத்த காயம் காணப்பட்டது என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், விக்னேஷின் உடல்முழுவதும் லத்திக்கொண்டு தாக்கப்பட்டதற்கான தடயங்களும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை திமுக அரசின் பொய் தகவலை தோலூரித்து காட்டியுள்ளது. இந்த சம்பவம் சாத்தான்கள் தந்தை மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை கூர்ந்துள்ளது.
இளைஞர் விக்னேஷ் லாக்கப் மரணம் குறித்து சட்டப்பேரவையில் ஏப்ரல் 26ந்தேதி முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவலர் தாக்கியே இளைஞர் விக்னேஷ் உயிரிழந்ததாகவும், ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,
“சென்னை மாநகர காவல்துறையில் இரவு வழக்கமாக நடைபெறும் வாகன சோதனையில் பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகிய இருவர் வந்த ஆட்டோவை கெல்லிஸ் அருகே காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். கஞ்சா போதையில் இருந்த அவர்களை காவல்துறையினர் விசாரித்தபோது சரியான பதில் சொல்லாத காரணத்தால் வாகனத்தையும் அவர்களை யும் சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தபோது விக்னேஷ் என்பவர் வரமறுத்திருக்கிறார். அத்தோடு, மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினரை தாக்கவும் முயற்சித்துள்ளார்.
பின், அவர்களை அழைத்துவந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மறுநாள் இருவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. காலை உணவு சாப்பிட்ட பின் விக்னேஷுக்கு திடீரென வாந்தி, வலிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த நிலையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு முறைப்படி அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், நான்கு காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
எனவே விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டுவருகிறது.
இவ்வாறு கூறினார்.