சென்னை: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 மற்றும் ‘உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” என்ற புதிய இணையதளம் உருவாக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் பேரவையில் அறிவித்தார். மேலும், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை, இனிமேல் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றப்படும் என்றும், ஜூன் மாதத்திற்குள் தமிழக தலைமைச் செயலகத்தை இ-அலுவலகமாக (இ-ஆபீஸ்) மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்  கடந்த ஏப்ரல் மாதம்  6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 10 ஆம் தேதி வரை  22 நாள்கள் நடைபெற உள்ள இந்த அமர்வில் பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாங்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இன்றைய அமர்வில்,  2022-23-ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 உருவாக்கப்படும் என அறிவித்தார்.  ஜூன் மாதத்திற்குள் தமிழக தலைமைச் செயலகத்தை இ-அலுவலகமாக (இ-ஆபீஸ்) மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு முதல்வரின் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட சில துறைகள் இ-அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்தத் திட்டம் மூலம் பணியாளர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமில்லாமல் ஆற்றல் மிகுந்த அரசு இயந்திரத்தை உருவாக்க இயலும் என்றும் அரசு அலுவலகத்தில் கோப்புகள் கையாளுவதில் உள்ள இடர்பாடுகள் களையப்படும் என்று தகவல் தொழில் நுட்ப துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” எனும் புதிய மாநில இணையதளம் உருவாக்கப்பட்டு தற்போது உள்ள மாநில இணையதளம், புதிய இணையத் தளத்திற்கு மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அரசுத் துறைகளில் தற்போது 43,359 பேர் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜுன் மாதத்திற்கு தலைமைச் செயலகம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இந்த முறையை அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலங்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.