தேனி: தேனியில் 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசும்போது, கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.
தேனியில் இன்று நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள நேற்று மாலை விமானம் மூலம் மதுரை சென்ற முதல்வர் பின்னர் கார் மூலம் தேனி சென்றார். மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்-அமைச்சரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, பி.மூர்த்தி, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், எஸ்.பி. பாஸ்கரன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தேனி செல்லும் வழியில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பகுதிகளில் உள்ள ரேசன் கடைகள், காவல்நிலையங்கள், காவலர் குடியிருப்புகளில் சென்று ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், அரப்படித்தேவன்பட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம் மற்றும் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
ஆண்டிப்பட்டியில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு வந்த முதல்-அமைச்சர் குடியிருப்புக்குள் இருந்த பொதுமக்களை சந்தித்தார். அப்போது அங்குள்ள ஒரு போலீஸ் காரரின் வீட்டுக்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். இதனை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு என்ன சாப்பாடு எனக் கேட்டார். உடனே அந்தப் பெண் தோசை என கூறினார். அதனைத் தொடர்ந்து எனக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்டார். உடனே அந்த பெண் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதனை வாங்கி குடித்து விட்டு நன்றி கூறினார். அப்போது அங்கு நின்ற சிறுவர், சிறுமிகளிடம் உங்களுக்கு விளையாட்டு மைதானம் உள்ளதா? என கேட்டு அவர்களிடம் உரையாடினார். இரவு தேனி வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்
அதைத்தொடர்ந்து இன்று காலை தேனி அன்னஞ்சி பிரிவு அருகே பைபாஸ் ரோட்டில் தனியார் மில் அருகே நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 10,427 பயனாளிகளுக்கு ரூ. 71.04 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 114.21 கோடி செலவில் முடிவுற்ற 40 பணிகளை திறந்து வைத்து, ரூ. 74.21 கோடி மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைவருக்கும் எனது பாராட்டுகள். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். மக்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே எங்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமாக உள்ளது.
10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது தி.மு.க. அரசு. ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவோம்.
கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
பெரிய குளம், உத்தமபாளையம் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
மக்களுக்கு சேவை செய்வதற்கே நேரம் போதுமானதாக இல்லை; விமர்சனத்திற்கு பதில் தர விரும்பவில்லை.
எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது உள்ளவர்களிடம் இல்லை.
இதுவரை 133 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ.64 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.