இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸை நியமித்துள்ளது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB).

கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் இந்த மாத தொடக்கத்தில் விலகியதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் 81 வது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

ECB இன் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குநர் ராப் கீயின் பரிந்துரையைத் தொடர்ந்து ECB இடைக்காலத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

“இங்கிலாந்து டெஸ்ட் அணியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன். இது ஒரு உண்மையான பாக்கியம். ஜோ (ரூட்) இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக அவர் செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

உலகெங்கிலும் உள்ள விளையாட்டுக்கான சிறந்த தூதராக எப்போதும் இருப்பதற்காக, டிரஸ்ஸிங் ரூமில் ஒரு தலைவராக எனது வளர்ச்சியில் அவர் பெரும் பங்கு வகித்துள்ளார், மேலும் நான் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட அவர் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்” என்று ECB அறிவிப்பைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

2013 ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இதுவரை 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2017 பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்டோக்ஸ் 2020 ம் ஆண்டு ரூட் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்புக்கு சென்றபோது அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

79 டெஸ்டில் 35.89 சராசரி ரன் விகிதத்தில், 26 அரைசதங்கள் , 11 சதங்கள் என மொத்தம் 5,061 ரன்கள் எடுத்துள்ளார் ஸ்டோக்ஸ்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 258 ரன் எடுத்த ஸ்டோக்ஸ் 6வது இடத்தில் பேட்டிங் செய்யும் போது அதிக ரன் எடுத்த சாதனையை படைத்துள்ளார்.

உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஸ்டோக்ஸ் இதுவரை மொத்தம் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதில் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.