சென்னை: அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன் காரணமாக அயோத்திய மண்டபம் மீண்டும், ஸ்ரீராம் சமாஜம் கைவசமே செல்கிறது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜத்துக்கு சொந்தமான அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையப்படுத்தியது. இது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி, அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்று கூறியதைத் தொடர்ந்து, தமிழகஅரசு, அதிகாரிகளை கொண்டு அயோத்தியா மண்டபத்துக்கு பூட்டு போட்டு கைப்பற்றியது.

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை  எதிர்த்து, ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்ததுடன், கோயிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நிமியத்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து இன்று விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது.

விசாரணையின்போது,  ஸ்ரீராம் சமாஜ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அயோத்தியா மண்டபத்தில் ராமர், சீதை சிலைகள் வைக்கப்பட்டிருந்தாலும், ஆகம விதிகளின்படி அவை பிரதிஷ்டை செய்யப்படவில்லை எனவும், அதனால் கோயிலாக கருத முடியாது எனவும் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஸ்ரீராம் சமாஜத்தின் பள்ளி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மதரீதியான நடவடிக்கைகள் நடந்ததால் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், பல வகைகளில் நிதி வசூலித்த இந்த அமைப்பு, வருவாய் விவரங்களை, அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை எனவும் உத்தரவை எதிர்த்து எப்போது வேண்டுமானாலும் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யலாம் எனவும் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு தள்ளிவைத்திருந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், கோயில் என்பதற்கான தீர்க்கமான எந்த காரணங்களும் கூறாமல் அயோத்தியா மண்டபத்துக்கு தக்கார் நியமனம் செய்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர். மாற்றுத்தீர்வு உள்ளதாக கூறி பல ஆண்டுகளுக்கு பின் தள்ளுபடி செய்தது தவறு எனக் கூறி தனி நீதிபதி உத்தரவையும் ரத்து செய்த நீதிபதிகள், ஸ்ரீராம் சமாஜத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து புதிதாக விசாரணை நடத்தலாம் என இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

சங்கங்களின் கீழ் பதிவு செய்த ஸ்ரீராம் சமாஜை கோயில் என்ற வரை யரைக்குள் கொண்டு வர முடியாது என்றும்  கூறியதுடன், அயோத்யா மண்டபத்தில், சிலைகளை வைத்து பக்தர்களை பூஜிக்க வைத்து தட்சணை பெறுவதை அறநிலையத்துறை நிரூபிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியதுடன்,  தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்ததுடன், கோயிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரியை நிமியத்த உத்தரவும் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டது.

மேலும், முறையான நடைமுறைகளை பின்பற்றி, அனைத்து குற்றச்சாட்டு குறித்தும் நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற்று, ஆதாரங்களை சேகரித்து, சமாஜத்துக்கும் வாய்ப்பளித்து, புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ் அமைப்பிடம் ஒப்படைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.