சென்னை: தமிழகத்தில் உள்ள 10 முக்கிய திருக்கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்படி சென்னை, வடபழனி முருகன் கோயிலில் பிரசாத திட்டத்தை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
அதன்படி இன்றுமுதல், வடபழனி ஆண்டவர் திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், திருவரங்கம் அரங்கநாதசாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ,மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் என மொத்தம் 10 முக்கிய திருக்கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. அதன்படி பழனியில் அனைத்து பக்தர்களுக்கும் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. பக்தர் ஒருவருக்கு பேப்பர் கப்பில் தலா 40 கிராம் அளவில் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திருக்கோயில்களில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உடற்சோர்வு ஏற்படுவதை தவிர்கும் விதமாக , இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் இந்து அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 முக்கிய திருக்கோயில்களில் அமல்படுத்தப்படுவதாகவும், இதன்படி தலா 40 கிராம் எடையில் பொங்கல் , தயிர் சாதம் , லட்டு , புளியோதரை , சுண்டல் உள்ளிட்ட 4 முதல் 6 வகை பிரசாதம் வழங்கப்படும் என்று கூறினார்.
சட்டமன்றத்தில் கடந்த 7.7.21ல் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி முதல்வர் வழிகாட்டுதலில் இத்திட்டம் தொடங்கியுள்ளது. உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்பதற்கேற்ப செயல்பாட்டில் உள்ள அன்னதான திட்டங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 341 கோயில்களின் பிரசாதம் , நைவேத்யம் மற்றும் உணவுக் கூடங்களில் தயாராகும் உணவுகளுக்கு மத்திய அரசின் தரச்சான்று பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு திருக்கோயில்களிலும் வழக்கமான நாளில் 10 முதல் 15 ஆயிரம் பேர் அன்னதானம் பெறுகின்றனர். அனைவரும் பாராட்டும் வகையில் இந்து அறநிலையத்துறை செயல்படும்.
இவ்வாறு கூறினார்.