சென்னை:
ணிக வழக்குகளை விசாரிக்கும் வணிக நீதிமன்றத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இன்று தமிழகத்தில் கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றத்தை திறந்து வைத்து உரையாற்ற உள்ளார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் அமைச்சர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

புதிதாக துவங்க உள்ள வணிக நீதிமன்ற முதல் நீதிபதியாக எல்.எஸ். சத்தியமூர்த்தி, நியமிக்கப் பட்டுள்ளார். இவர் சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.